`மல்யுத்தம் கற்றுத்தர தயார்’ - தென்கொரிய அதிபர் மனைவியை சந்தித்த `டங்கல்’ குடும்பம்!

‘உங்கள் குடும்பம் தென்கொரியாவுக்கு வந்து அங்குள்ளவர்களுக்கு மல்யுத்தம் கற்றுத்தர வேண்டும்’ என நிஜ டங்கல் குடும்பத்தைச் சந்தித்த தென்கொரிய அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

டங்கல் குடும்பம்

நான்கு நாள்கள் அரசு முறை பயணமாக ஜுலை 8-ம் தேதி முதல் முறையாக இந்தியா வந்திருந்தார் தென்கொரிய அதிபர் முன் ஜே இன். அதிபருடன் அவரின் மனைவி கிம் ஜூங் சூக் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். தென்கொரிய அதிபரும் அவர் மனைவியும், இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக, அதிபரின் மனைவிக்கு இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து பார்க்க திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஒளிபரப்பப்பட்ட அமீர்கான் நடித்த டங்கல் படம் அதிபரின் மனைவியை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால் டங்கல் கதையின் நிஜ கதாநாயர்களான ஹரியானாவில் உள்ள போகத் குடும்பத்தை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

கிம் ஜூங் சூக்

அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் அதிபரின் மனைவியுடன் போகத் குடும்பம் சந்தித்துள்ளனர். அப்போது, காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கம் வென்ற கீதா போகத்தை மிகவும் பாராட்டியுள்ளார் கிம் ஜூங் சூக். இந்தத் தங்கத்தை வெல்ல நீங்களும் உங்கள் குடும்பமும் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்தித்துள்ளீர்கள் என்பதைப் படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். உங்கள் குடும்பத்துக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து நீங்கள் பல போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். மேலும், போகத் குடும்பம், அதிபரின் மனைவிக்கு நீல நிற புடவையும் தங்க நிற கதத்தையும் பரிசாக வழங்கியுள்ளனர். 

கிம் ஜூங் சூக் உடன் போகத் குடும்பம்

பின்னர் இது குறித்து பேசிய போகத் சகோதரிகளின் தந்தை மகாவீர் சிங், ”டங்கல் படத்தைப் பார்த்து தான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டதாகக் கூறினார். நீங்கள் விரும்பினால், எங்கள் குடும்பம் தென் கொரியாவுக்கு வந்து அங்குள்ள வீரர்களுக்கு மல்யுத்தம் கற்றுத் தர தயாராக இருப்பதாக நான் கூறினேன்” எனக் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பேசிய மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், ‘ கிம் ஜூங் சூக் மிகவும் கனிவாக எங்களிடம் பேசினார். அவருக்கு எங்கள் மொழியைப் புரிந்துகொள்ள சற்று சிரமாக இருந்தாலும் நாங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு பதிலளித்தார்’ எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!