நிதிஷை சமாதானப்படுத்திய அமித் ஷா?! - பீகார் சுற்றுப்பயண நிலவரம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை இன்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. `பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தள கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்காகவே பீகார் சென்றார் அமித் ஷா' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமித் ஷா - நிதிஷ் குமார்

(Photo Credit- ANI)

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் அமித் ஷா. அதன் ஒருபகுதியாகக் கடந்த 9-ம் தேதியன்று தமிழகம் வந்த அவர், தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். இதைத் தொடர்ந்து, இன்று பீகார் தலைநகர் பாட்னாவுக்குச் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில், முதல்வர் நிதிஷ் குமார் உட்பட கட்சி நிர்வாகிகளுடன் காலை உணவை எடுத்துக்கொண்டார். இதன்பிறகு, தேர்தல் தொடர்பாகத் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். மீண்டும் இன்று இரவு நடக்கும்  விருந்திலும் பங்கேற்க இருக்கிறார். இதில், தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இடம் பெறலாம் என்கின்றனர் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள். ஆனால், ' கூட்டணிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளதால், நிதிஷை சமாதானப்படுத்தவும் இந்தப் பயணத்தை அமித் ஷா பயன்படுத்திக்கொள்ள இருக்கிறார்' எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. தேர்தல் முடிவில் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியில் இருந்து விலகிய, நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிசெய்துவருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!