`ராணுவத்தில் சேர முடியாத விரக்தி' - ஃபேஸ்புக்கில் லைவில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

இந்திய ராணுவத்தில் சேரமுடியாத விரக்தியில், இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர், முன்னா குமார் (24). பட்டதாரியான இவர், இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக முயற்சி செய்துவந்துள்ளார். பலமுறை தேர்வுக்குச் சென்றும் இவரால் தேர்ச்சிபெற முடியவில்லை. தனது 17 வயதில் இருந்து ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டுள்ளார். ஆனால், இவருக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த  முன்னா குமார், கடந்த செவ்வாய்க்கிழமை (10-7-18) ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை லைவில் பார்த்த சிலர் அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய பிறகு, தனக்கான முடிவை முன்னா தானே தேடிக்கொண்டார். இறப்பதற்கு முன் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில், ராணுவத்தில் சேர்வதற்காகத் தான் மேற்கொண்ட போராட்டங்கள்குறித்து எழுதியுள்ளார். குடும்பத்தினர் தன்னை மன்னித்துவிடுங்கள் என அந்த 6 பக்க கடிதத்தில் எழுதியுள்ளார். 

இதுகுறித்து முன்னாவின் சகோதரர் கூறுகையில், “முன்னாவுக்கு பகத்சிங்கைப் பிடிக்கும் அவர்தான் அவனுக்கு முன்மாதிரி. அதனால் தான் அவன் ராணுவத்தில் சேர விரும்பினான். எப்போதும் போலத்தான் இருந்தான். எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான் இரவு உணவு சாப்பிட்டோம். அவன் இவ்வாறு செய்துகொள்வான் என நாங்கள் யாரும் நினைக்கவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!