வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (12/07/2018)

கடைசி தொடர்பு:19:25 (12/07/2018)

கருணை மதிப்பெண் உத்தரவு எதிரொலி - எம்.பி.பி.எஸ் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்!

நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவால் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.  இந்தாண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது. அதற்கான முடிவுகளும் சில நாட்களிலேயே வெளியிடப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி மருத்துவ தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைப்பெற்றது.

இதற்கிடையில்  நீட் தேர்வின் போது தமிழ் வினாத்தாளில் 49 மதிப்பெண்கள் தவறாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்றும் இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டு வார காலத்திற்குள் தரவரிசைப்பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தவரை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடும், அதற்கு எதிராக ரங்கராஜன் எம்பி சார்பில் கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால் அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் 16-ம் தேதி நடக்கவிருந்த நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நிறுத்தம் தொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை http://www.mcc.nic.in  என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.