வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:12:30 (13/07/2018)

இம்ரான் கான் பற்றி சுயசரிதையில் முன்னாள் மனைவி அதிர்ச்சித் தகவல்!

இம்ரான் கான் முன்னாள் மனைவி ரெஹம் கான் எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகத்தில், `இம்ரானுக்கு சட்ட விரோதமாக 5 குழந்தைகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இம்ரான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 

இந்நிலையில், இவரின் முன்னாள் மனைவி ரெஹம் கான் தன் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், இம்ரான் கான் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அதில், ``இம்ரான் கானுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. முறை தவறி அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், சில குழந்தைகள் இந்தியப் பெண்களுக்குப் பிறந்தவை. அவர்களுக்கு 34 வயது இருக்கக் கூடும். இந்த விஷயங்களை இம்ரான் கானே தன்னிடம் கூறியுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இம்ரான் கான் தன் தேர்தல் வாக்குமூலத்தில் தனக்கு சட்டபூர்வமாக இரண்டு குழந்தைகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ரெஹம் கான் எழுதியுள்ள சுயசரிதையில் இம்ரான் கானுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் வாழ்க்கை குறித்து முரண்பாடான கருத்துகள் உள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். இந்த நேரத்தில், எழுந்துள்ள சர்ச்சை அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.