`கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!' -பா.ஜ.க-வை எச்சரிக்கும் மெஹபூபா முஃப்தி | If BJP tries to create divisions in the PDP the outcome will be dangerous says Mehbooba Mufti

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:13:50 (13/07/2018)

`கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!' -பா.ஜ.க-வை எச்சரிக்கும் மெஹபூபா முஃப்தி

``மக்கள் ஜனநாயகக் கட்சியை பா.ஜ.க உடைக்க நினைத்தால் கடும் விளைவைச் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி. 

மெஹபூபா முஃப்தி

Photo Credit - ANI

ஜம்மு- காஷ்மீரில், கடந்த மாதம் 19-ம் தேதியன்று மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகப் பா.ஜ.க அறிவித்தது. இதனால், மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அங்கு, தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இப்படியான சூழலில், மக்கள் ஜனநாயகக் கட்சியில் உள்ள சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ.க-வுடன் கைகோத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால், மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டன. 

இந்நிலையில், ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மெஹபூபா முஃப்தி, `மக்கள் ஜனநாயகக் கட்சியை உடைக்க டெல்லி முயற்சி செய்தால் சலாஹூதீன், யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மீண்டும் பிறந்து வருவார்கள். இதனால் காஷ்மீரில் பெரிய அளவில் பிரச்னை உருவாகும். காஷ்மீரில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் அதிகரிக்கும் சூழலும் ஏற்படும். அதை எதிர்கொள்ள டெல்லி தயாராக இருக்க வேண்டும். நானும் அவர்களைப் போன்று சிந்திக்க நேரிடும்' என்று பா.ஜ.கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.