வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (13/07/2018)

கடைசி தொடர்பு:13:28 (13/07/2018)

எல்லையில் கள்ளநோட்டுகள் புழக்கம்? பயன்படுமா ராஜ்நாத் சிங் பங்களாதேஷ் பயணம்?

எல்லையில் கள்ளநோட்டுகள் புழக்கம்? பயன்படுமா ராஜ்நாத் சிங் பங்களாதேஷ் பயணம்?

ள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்களாதேஷூக்கு மூன்று நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் செல்கிறார். தமது இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு உள்துறை அமைச்சர் அஸதுஸூமான் கான்-வுடன் இந்தியா - பங்களாதேஷ் இடையே எல்லைப்பாதுகாப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு, இருநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தவுள்ளார். 

குறிப்பாகப் பாதுகாப்பு நிலைமை குறித்த பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், அங்குள்ள இளைஞர்களையும், ரோஹிங்யா அகதிகளையும் தீவிரவாத அமைப்பில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையைத் தடுப்பது குறித்தும் உள்துறை அமைச்சர், பங்களாதேஷ் அமைச்சருடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவையும் மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்கா நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விசா விண்ணப்ப மையத்தைத் திறந்து வைக்கவுள்ளனர். 

சர்தா என்ற இடத்தில் உள்ள பங்களாதேஷ் போலீஸ் அகாடமியில் நாளை இருநாட்டு நட்புறவு கட்டடத்தையும் ராஜ்நாத் சிங்கும், ஷேக் ஹசினாவும் தொடங்கி வைக்கிறார்கள். இந்த மூன்று நாள் பயணத்தின்போது, ராஜ்நாத் சிங், இந்தியா - பங்களாதேஷ் உள்துறை அமைச்சர்கள் நிலையிலான ஆறாவது கூட்டத்துக்கு அந்நாட்டு அமைச்சருடன் இணைந்து தலைமைவகித்து உரையாற்றுகிறார். பங்களாதேஷ் செல்லும் உள்துறை அமைச்சருடன் உயர் அதிகாரிகள் குழுவும், எல்லைப் பாதுகாப்புப் படை பிரதிநிதிகளும் செல்கிறார்கள். 

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணத்தின்போது, எல்லைக்கு அப்பாலிலிருந்து, தொடர்ந்து இந்தியக் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது தொடர்பான பிரச்னையும் விவாதிக்கப்படவிருக்கிறது. ஷேக் ஹசினாவுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சு நடத்தவும் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார். தவிர, பங்களாதேஷூக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுவோரை அடையாளம் காணும்வகையில், சட்ட அமலாக்கத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமென ராஜ்நாத் சிங் அப்போது கோரிக்கை விடுப்பார் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியா - பங்களாதேஷ் எல்லைப்பகுதி வழியாக, இந்திய கரன்சியான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகின. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்ட எல்லை வழியாக இந்தியாவுக்குள் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அனுப்பப்படுவது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்போதே இந்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பங்களாதேஷின் அதிரடிப் படை போலீஸார், அந்நாட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டைத் தயாரித்து வழங்கிய தொழிற்சாலை ஒன்றைக் கண்டறிந்து, அதை அழித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போது இரண்டுபேரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இத்தகைய சூழலில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின், பங்களாதேஷ் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

இதுகுறித்து டெல்லியில் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ``இந்தியா - பங்களாதேஷ் இடையே இருதரப்பு நல்லுறவுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணத்தின் போது, அந்த நாட்டுக்குள் குடியேறும் ரோஹிங்யா அகதிகள் உள்ளிட்டோரின் சட்டரீதியான அடையாளம், அவர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட வேண்டும் அறிவுறுத்தப்படும். மேலும், பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்கள், போதைப் பொருள்கள் போன்றவை கடத்தப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பங்களாதேஷ் அரசு உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்படும். இந்தியாவுடனான பங்களாதேஷ் எல்லையானது சுமார் 4,100 கிலோ மீட்டர் இருப்பதால், எல்லைப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அமைச்சர் வலியுறுத்துவார்" என்று தெரிவித்தனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்