வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:16:30 (13/07/2018)

பாலியல் வழக்குகளில் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து!- ஹரியானா முதல்வர் அதிரடி

'பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமம், துப்பாக்கி உரிமம் ரத்துசெய்யப்படும்' என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். இதனால், `பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

பாலியல்

ஹரியானா மாநிலத்தில்,  சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதை கட்டுக்குள் கொண்டு வர, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் புதிய தண்டனைச் சட்டத்தை அறிவித்துள்ளார்.

மனோகர் லால் கட்டார்இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், `பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகளின் ஓட்டுநர் உரிமம், துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்படும். பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் முதியவர்களாக இருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் ஆகிய சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும், பாலியல் குற்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களின் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, இந்த பென்ஷன் சலுகைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரேஷன் சலுகை தவிர்த்து மற்ற அனைத்துச் சலுகைகளும் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்படும். மாநிலத்தில், பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்‌ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் அமல்படுத்தப்படும். இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது' என்றவர், `பாலியல் மற்றும் ஈவ்டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வழக்குகள் காவல் நிலையங்களில் தடையின்றி விசாரிக்கப்படும். பாலியல் குற்ற வழக்குகளை ஒரு மாதத்துக்குள்ளும், ஈவ்டீசிங் வழக்குகளை 15 நாள்களில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் மற்றும் ஈவ்டீசிங் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை விரைந்து விசாரனை செய்வதற்கு ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன' என்று தெரிவித்தார்.