`பாரத ரத்னாவைப் பறிக்க வேண்டும்!' -அன்னை தெரசா குறித்து ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக் கருத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அன்னை தெரசா காப்பகத்தில், குழந்தைகள் விற்கப்படுவதாகக் கடந்த வாரம் எழுந்த புகாரில், இரண்டு கன்னியாஸ்திரீகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாரத ரத்னா குறித்து ஆர்.எஸ்.எஸ் கருத்து

குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ட்விட்டரில், ’அன்னை தெரசா, தனியாகத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால், இப்போது அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. சகோதரிகள் குறிவைக்கப்படுகிறார்கள். பா.ஜ.க-வினர் யாரையும் விடமாட்டார்கள். தொண்டு நிறுவனம், ஏழை மக்களுக்குச் செய்யும் தங்களது பணிகளைத் தொடரட்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், நேற்று தனியார் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் டெல்லி பிரசார தலைவரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான ராஜிவ் துலி, “தொண்டு நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும். அவர்கள் என்றுமே மக்கள் நலனுக்காக உழைத்தது கிடையாது. மதமாற்றம்தான் அவர்களின் கொள்கை” என்றார். இவரது இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அன்னை தெரசாவுக்கு, அவரது தன்னலமற்ற சேவைக்காக 1980 -ம் ஆண்டு  இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியும் ராஜிவ் துலியின் கருத்தை வரவேற்றுப் பேசியுள்ளார். அவர், “நான் 100 சதவிகிதம் இதை ஆதரிக்கிறேன். ஒருவர்மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில், அவர் சிறந்த மனிதராகக் கொண்டாடப்படவேண்டிய அவசியம் இல்லை” என்றார். இந்தப் பேட்டியின்போது சுப்பிரமணியன் சுவாமி, ஆங்கிலப் புத்தகமான “தி மிஸ்னரி பொஸிசன்: மதர் தெரசா இன் தியரி அண்ட் ப்ராக்டீஸ்” என்ற புத்தகத்தில் அன்னை தெரசா  பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!