வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (13/07/2018)

கடைசி தொடர்பு:19:14 (13/07/2018)

`ஹீமா களத்தில் நிரூபித்தால் போதும்; ஆங்கிலத்தில் அல்ல!’ - தடகள சம்மேளனத்துக்குக் குவியும் கண்டனங்கள் #HimaDas

தடகளப்போட்டியில் தங்கம் வென்ற ஹிமாதாஸ் குறித்து இந்திய தடகள சம்மேளனம் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹீமாதாஸ்

20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப்போட்டி பின்லாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹீமாதாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த வெற்றியை இந்தியாவே கொண்டாடி வருகிறது. சமூகவலைதளங்களில் ஹீமாதாஸுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய தடகள சம்மேளனம் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்தியத் தடகள சம்மேளனம் நேற்று (12-ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், “அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஹீமாதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது ஆனாலும் சிறப்பாகப் பேசியுள்ளார். அவரை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்படுங்கள்’’ எனப் பதிவிட்டிருந்தனர். இது தற்போது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தப் பதிவுக்குப் பலர் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். ஹீமா களத்தில் தன்னை நிரூபித்தால் போதுமானது. ஆங்கிலத்தில் அல்ல எனத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர். அதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இந்திய தடகள சம்மேளனம், “அவர் மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்துள்ளார். அவருக்கு இந்திகூட சரளமாகப் பேச வராது. பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட விதத்தையும் தன்னால் முடிந்த வரை சிறப்பாக ஆங்கிலத்தில் பேசியதற்கு பாராட்டுதான் தெரிவித்தோம். தற்போது அனைவரும் எங்கள் ட்வீட்டை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளனர்.