வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:10:37 (14/07/2018)

`மோடி அறிவித்த திட்டங்களால் முன்நோக்கிச் செல்கிறது இந்தியா' - அருண் ஜெட்லி ஆரூடம்

உலகின் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில், வரும் ஆண்டு இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கணித்துள்ளார். `ஏழைமக்களின் நலனுக்காக காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை, மோடி அறிவித்த திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்நோக்கி செல்ல உதவியது' என தெரிவித்துள்ளார். 

அருண் ஜெட்லி'

உலக நாடுகளின் உள்நாடு உற்பத்தி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு 2017-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகள் பட்டியலை சமீபத்தில் உலக வங்கி வெளியிட்டது. இதில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், பிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து, `இதே சீரான பாதையில் பொருளாதார நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் இங்கிலாந்தை முந்தி இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறிச் செல்லும்' எனக் குறிப்பிட்டு தன் ஃபேஸ்புக்கில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. 

`கிராமப்புற இந்தியாவுக்கு முழக்கங்களைத் தந்தது காங்கிரஸ் - வளங்களைத் தந்தது பிரதமர் நரேந்திர மோடி' என்ற தலைப்பில் ஜெட்லி வெளியிட்ட கட்டுரையில், `1970-1980களில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எந்தத் திட்டங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பா.ஜ.க பின்பற்றவில்லை. ஏழைமக்களின் நலனுக்காக காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை, அதற்குப்பதில் `வறுமையை ஒலிப்போம்' போன்ற முழக்கங்களை எழுப்புவதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால், நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை, நேர்மாறாக மீண்டும் வறுமை மட்டுமே அதிகரித்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்நோக்கிச் செல்ல உதவியது. கடந்த 4 ஆண்டுகளின் இந்தியா அபரிவிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே வேகத்தில் இந்தியா சென்றால், தனிநபர் வருவாய், குடிமக்களின் வாழ்க்கைத் தரம், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும், உற்பத்தி, தொழில்கள், சேவைத் துறைகள், வேலை வாய்ப்புகள் ஆகியவை மேலும் அதிகரிக்கும். கிராமப்புறங்களை வளர்ச்சியடையச் செய்ய முடியும். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்த முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.