வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (14/07/2018)

கடைசி தொடர்பு:12:00 (14/07/2018)

நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி இவர்! - குவியும் பாராட்டுகள்

அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் இன்று பொறுப்பேற்க உள்ளார். காம்ரூப் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

நீதிபதி

நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோயிதா மோன்தால் கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வித்யா கம்ப்ளே என்பவர் நாக்பூரில் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இவர்களைத் தொடர்ந்து நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா (Swati Bidhan Baruah) பதவியேற்கிறார். லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக தன் பணியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து  சுவாதி பிதான் கூறுகையில், `பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் திருநங்கைகள் ஏளனம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய அந்தஸ்து கிடைத்து, எங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை, விரைந்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது என் பாலினத்தவர்க்கு எதிரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும்' என்றார் நம்பிக்கையுடன்.