வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (14/07/2018)

கடைசி தொடர்பு:15:20 (14/07/2018)

நிரவ் மோடியிடம் நகை வாங்கிய 50 தொழிலதிபர்களுக்கு 'செக்' வைக்கும் வருமான வரித்துறை

நிரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகளில் விலை உயர்ந்த வைர நகைகள் வாங்கிய 50 செல்வந்தர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரி ஏய்ப்பு குற்றம் நிரூபணமானால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. 

நிரவ் மோடி

நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்துவிட்டு, குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான விலை உயர்ந்த 9 சொகுசுக் கார்கள், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர முயன்று வருகின்றனர் அதிகாரிகள். நிரவ் மோடியை எளிதில் பிடிக்கும் வகையில், இன்டர்போல் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகளில், நகைகள் வாங்கிய தொழிலதிபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியான தகவலில், `நிரவ் மோடியின் அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. அதில், நிரவ்வுக்குச் சொந்தமான நகைக் கடைகளில் விலை உயர்ந்த வைர நகைகள் வாங்கியவர்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அவர்கள், அந்த நகைகளை தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கியதாகவும் மீதம் உள்ள தொகையை ரொக்கமாகச் செலுத்தியதாகவும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, ரொக்கமாக பணத்தைச் செலுத்தி நகைகள் வாங்கவில்லை என்று சிலர் பதிலளித்துள்ளார். ஆனால், அவர்கள் தாக்கல் செய்த வரி கணக்கு ஆவணங்களில் அது ஒத்துப்போகவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட 50 பேர் 2014-2015 ஆண்டில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு குற்றம் நிரூபணமானால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.