வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/07/2018)

கடைசி தொடர்பு:17:20 (14/07/2018)

`வேகமாக போகச் சொன்ன பெண் பயணி!' - கையை முறித்த ஊபர் ஓட்டுநர்

ஊபர் கால் டாக்ஸி புக் செய்து பயணித்த பெண்ணின் கை விரல் எலும்புகளை உடைத்து, கொடூரமாகத் தாக்கியதாக ஓட்டுநர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபெர்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 6-ம் தேதி ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் மீது அபீர் சந்திரா என்றவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஊபர் கால் டாக்ஸி புக் செய்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒட்டுநர் மிகவும் மெதுவாகச் சென்றார். அவரிடம், வீட்டில் விருந்தினர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் வேகமாகக் காரை ஓட்டுங்கள் என்று கூறினேன். அவர், கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டது. அதனால், பாதி வழியில் என்னை இறங்கச் சொல்லி வலியுறுத்தினார். நான் இறங்கவில்லை. அதனால், என் கையை பிடித்துத் தாக்க முயன்றார். அப்போது, என் மூக்கில் பலத்த அடி பட்டு, ரத்தம் வடியத் தொடங்கியது. மேலும், கை விரல் எலும்புகளையும் முறித்துவிட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், `ஜெயா நகரிலிருந்து சந்திரா கால் டாக்ஸி புக் செய்துள்ளார். பயணத்தின் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சந்திராவை அவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதன்பிறகு, சந்திரா கொடுத்த புகாரின் அடிப்படையில், ஊபர் கார் ஓட்டுநர் அனுஷை கைது செய்து, விசாரித்து வருகிறோம்' என்றார்.