வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (14/07/2018)

கடைசி தொடர்பு:19:50 (14/07/2018)

திருடனாகப் பிடிபட்டவர் மாப்பிள்ளையான ருசிகர சம்பவம்!

பீகாரில் காதலியைப் பார்க்க நள்ளிரவில் சுவர் ஏறிக் குதித்தவருக்கு அடுத்த நாள் திருமணம் நடைபெற்ற நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

காதலி

பீகார் மாநிலம் மஹாராஜ்கன்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் சிங். இவர் ராணுவத்தில் கிளார்க் பணியில் உள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உறவினர் திருமணத்தில் லக்‌ஷினா குமாரி என்ற பெண்ணைப் பார்த்துள்ளார். கண்டதும் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர் தனது காதலை அந்தப்பெண்ணிடம் கூற அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். 5 வருடமாக காதலித்து வருகின்றனர். விஷால் ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக தனது சொந்த ஊர் வந்துள்ளார். தனது காதலியைப் பார்க்க வேண்டும் என தோன்றியுள்ளது. லக்‌ஷினா குமாரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக நள்ளிரவில் அவரது கிராமத்துக்குச் சென்றுள்ளார்.

அந்தப்பெண் தனது குடும்பத்தினர் இரவு நேரத்தில் மாடியில் உறங்குவார்கள் என்றும் தான் மட்டும் வீட்டினுள் இருப்பேன் என எப்போதோ சொல்லியதை நினைவில் வைத்துக்கொண்டு ஏதோ தைரியத்தில் சுவர் ஏறிக் குதித்துவிட்டார். சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து விட்டனர். யாரோ நிற்பதைக் கண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டனர். இவர்களது சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் ஒன்று கூடிவிட்டனர். அங்கிருந்து தப்பிக்க முயன்ற விஷாலைப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். காதலன் துடிப்பதை தாங்க முடியாத லக்‌ஷினா குமாரி உண்மையைக் கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷாலை ஒரு அறையில் வைத்து பூட்டி அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

விஷாலின் தாத்தா பஞ்சு யாதவ் அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர். இதனையடுத்து இரு கிராம மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டினர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்துக்கு இரு விட்டார்களும் சம்மதம் தெரிவித்தனர். விடியற்காலையில் பெண் வீடு விழாக் கோலம் பூண்டது. திருமண ஏற்பாடு நடைபெற்றது. கிராம மக்கள் 100 பேர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. விஷாலின் தாத்த பஜ்சு யாதவ் மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். அப்போது பேசியவர், ``வரதட்சனை இல்லா திருமணம்தான் என் கொள்கை அதனை என் பேரனுக்கு நடத்தி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி காவல்துறையினர், ``இருவரும் மேஜர் என்பதால் இருவீட்டாரும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து விட்டனர். இதன் பின்னர் என்ன செய்ய முடியும் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோம்" என்றனர்.