வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (15/07/2018)

கடைசி தொடர்பு:09:00 (15/07/2018)

மனைவியைக் கொன்ற கணவனை அடித்துக் கொன்ற கிராம மக்கள் - பீகார் சோகம்!

தன் மனைவியைக் கொன்ற கணவனை, ஊர் மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் நடந்தேறியுள்ளது. 

பீகார் மாநிலத்தின், ரோடாஸ் மாவட்டத்திலிருக்கும் விஷ்ரம்பர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் நட். இவருக்கு வயது 48. இவரின் மனைவி பெயர் தேவி. அவருக்கு வயது 40. 

இருவருக்குமான குடும்பத் தகராறில், கோபால் தன் மனைவியை இரும்புக் கம்பு கொண்டு தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தேவியை மீட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர் கிராம மக்கள். 

பீகார் - கொலை - சோகம்

தலையில் பலமான காயம் ஏற்பட்டிருந்ததாலும், அதிகமான ரத்தம் வெளியேறியிருந்ததாலும், மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் கூட தேவியைக் காப்பாற்ற முடியவில்லை. தேவி இறந்த செய்தி ஊர் மக்களிடம் சலசலப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. 
ஊர்மக்களின் கோபம் தேவியின் இறப்பிற்குக் காரணமாக இருந்த அவரின் கணவர் கோபால் நட் மீது திரும்பியது. ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோபால் நட்டை அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரின் உடல்களும், உடற்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, முஃபஸில் காவல் நிலையத்தில் வழக்குப் பதியபட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க