`நான் மகிழ்ச்சியாக இல்லை...' -கண்கலங்கிய முதல்வர் குமாரசாமி

விவசாயிகளுக்காக பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும் தனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. 

குமாரசாமி

Photo Credit - ANI

கட்நாடகா மாநிலம் பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அம்மாநில முதல்வர் குமாரசாமி. அப்போது பேசிய முதல்வர்,  `உங்களது மூத்த சகோதரர் அல்லது இளைய சகோதரராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருப்பது, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறேன். என் பெற்றோரின் ஆசீர்வாதம், கடவுளின் கிருபையாலும் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளேன். காங்கிரஸ் உதவியுடன் அரசாங்கத்தை அமைத்துள்ளேன். மங்களூரில் மீனவப் பெண்கள் நடத்திய போராட்டத்தில்,  `குமாரசாமி எங்கள் முதல்வர் அல்ல' என்று முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியமைத்து முழுமையாக 2 மாதங்கள் கூட முடியவில்லை. மக்கள் நலனுக்காகப் பாடுபட கடமைப்பட்டுள்ளேன். கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இப்படியான, விமர்சனங்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது' என்று பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார். இதனால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள், தலைவர்கள் என அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!