நாடு கடந்து மாறி வந்த உடல்..! -கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | The body of Tamil youths was sent for the body of Kerala youth

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (15/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (15/07/2018)

நாடு கடந்து மாறி வந்த உடல்..! -கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அபுதாபி நாட்டில் இறந்த கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த இளைஞரின் உடலுக்குப் பதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாறிய உடல்

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் நிதின்(29). அபுதாபியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நிதின் ஒரு விபத்தில் பரிதாபமாக இறந்தார். 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிதினின் உடல் அபுதாபி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பதப்படுத்தி கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. கரிப்பூர் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டார்கள். பின்னர் உடலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்துச்சென்றனர். நேற்று இறுதிச்சடங்குக்கான நடவடிக்கைகளில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயம் நிதினின் உடல் அபுதாபியில் இருப்பதாக அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிதினின் உறவினர்கள் இதுகுறித்து கேரள முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டனர்.

போலீஸ் அதிகாரிகள் உடனடியாக களம் இறங்கி ஏற்கனவே வந்த உடல் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காமாச்சி கிருஷ்ணன் எனத் தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி.க்கு தகவல் அளித்து அந்த உடலை எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. வயநாடு நிதினின் உடலை அபுதாபியில் இருந்து கொண்டுவரும் நடவடிக்கையில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கேரள இளைஞரின் உடலுக்குப்பதில் தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டது குறித்தும் கேரள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.