வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/07/2018)

கடைசி தொடர்பு:12:05 (16/07/2018)

தொடரும் வாட்ஸ் அப் வதந்திகள்..! -பறிபோனது மேலும் ஓர் உயிர்

வாட்ஸ் அப்பில் பரவிய போலி வதந்தியால் மென் பொறியாளர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. 

வாட்ஸ் அப்- குழந்தைக் கடத்தல்


நாடு முழுவதும் குழந்தைக் கடத்தல் தொடர்பாகப் போலியான வதந்தி செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. இதனால், வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள், வேலை காரணமாக வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்பவர்கள் என அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும் நேரடியாக தலையிட்டு பரவும் வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அந்நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. இதற்கு, `செயலி வழியாகப் பகிரப்படும் வதந்திகளைத் தடுப்பது மிகவும் சவாலாக உள்ளது; இதைச் சரி செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம்' என்று விளக்கம் அளித்தது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பிடார் பகுதியில், முகமது ஆசம் என்ற இளைஞரை குழந்தைக் கடத்த வந்தவர் என்று தவறுதலாக எண்ணிக் கொடூரமாக தாக்கியுள்ளனர் முர்கி கிராம மக்கள். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `பஷீர், சல்மான், அக்ரம், முகமது ஆசம் ஆகிய இளைஞர்கள் பிடார் சாலை ஓரத்தில் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு, அவர்கள் சாக்குலேட்டுகள் கொடுத்ததாகத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், அப்பகுதி மக்களுக்கு வாட்ஸ் அப்பில் சாக்குலேட்குகளை கொடுத்து குழந்தைகளைக் கடத்திச் செல்லும் கும்பல் அருகில் முகாமிட்டு இருப்பதாக குரூப்பில் வதந்தி செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து, திரளாக கூடிய கிராம மக்கள், 4-பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து காரில் ஏறி தப்பிக்க முயன்றபோது, இளைஞர்களை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இழுத்து அடித்து உதைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் செல்வதற்குள் முகமது ஆசம் இறந்துவிட்டார். மூன்று பேர் பலத்தக் காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, 32-பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்' என்றார்.