``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி!'' - ஆனந்த் சர்மா தாக்கு

 ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயன்று வருகிறார்'' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

மோடி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசம்கரில் கடந்த (14-7-18) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ``காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். `உங்கள் கட்சி என்ன, முஸ்லிம் ஆடவர்களுக்கான கட்சியா? முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியம் மற்றும் உரிமைகள் அளிக்கப்படுகிறதா?' முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றவிடாமல், எதிர்க் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ஆனந்த் சர்மா. இன்று (15-7-18) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி தொடர்ந்து அவருடைய அலுவலகத்தின் மாண்பு குறையும் வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சு, பிரதமர் மோடி மிகவும் நோயுற்ற மனநிலையில் இருக்கிறார்; குழப்பமான மனநிலையில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை தரும் விஷயமாகும். வரலாற்றையும், உண்மைகளையும் தவறாகச் சித்தரித்து  பேசி வரும் மோடி, நாடு முழுமைக்கும் பிரதமர் என்பதை மறந்துவிட்டு பி.ஜே.பி-க்கு மட்டும்தான் பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகிறார். 

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல், லாலா லஜபதி ராய், மெளலானா ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்களாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள மோடி ஒருமுறை வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி முத்தலாக் மசோதாவுக்கு எதிரானது என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்றும் பிரதமர் மோடி பேசியிருப்பது தகுதியில்லாத வார்த்தையாகும். கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொய்களை விற்பனை செய்பவராக இருந்துவரும் மோடி, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்றவே முயன்று வருவதுடன், அவற்றை விவாதமின்றி நிறைவேற்றவே விரும்புகிறார்'' என்றார், ஆனந்த் சர்மா.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!