வெளியிடப்பட்ட நேரம்: 06:41 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:37 (16/07/2018)

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்’ - அசாருதீன்!`

கிரிக்கெட் வீரரான அசாருதீன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அசாருதீன். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றபின் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கடந்த 2009–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானின் டோங்–சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். 

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான், செகந்திராபாத் தொகுதி மக்களுக்குப் பணிசெய்ய விரும்புகிறேன். அதற்காக அந்தத் தொகுதியில் மிகக் கடினமாக உழைத்துவருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர். இந்தத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சித் தலைமையிடமும், மாநிலப் பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புகிறது என நினைக்கிறேன். எனினும், இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டியது கட்சிதான். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்டபோதும் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தேன். ஆனால், எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை'' என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானாவிலிருந்து அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அம்மாநிலப் பிரிவு, அவருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க