வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:29 (16/07/2018)

வகுப்பறையில் டிஜிட்டல் திரை! - ஹை-டெக் ஆக மாறும் கேரளா அரசுப் பள்ளிகள்

கேரளாவில் செயல்படும் 40,000-க்கும் அதிகமான பள்ளிகளின் வகுப்பறைகளை ஹை-டெக் வசதியுடன்கூடிய வகுப்பறைகளாக  மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரளா அரசு. முதற்கட்டமாக 3,676 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஹை-டெக்காக மாற்றப்படுகிறது.

கேரளா பள்ளிகள்

கேரளா மாநிலத்தில் உள்ள 4,752 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்விப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் கேரளா உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப (கே.ஐ.டி.இ) வாரியம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த மாதத்திலிருந்து தொடங்குகிறது. `முதற்கட்டமாக 3,676 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு, ஹை-டெக் வசதிகள் ஏற்படுத்தப்படும்; 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்பட உள்ளன' என விவரிக்கிறார், கே.ஐ.டி.இ துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அன்வர் சதாத்.

இதுபற்றி அன்வர் சதாத் கூறுகையில்,  `மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 5,096 பள்ளிகள், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 7,062 பள்ளிகளின் வகுப்பறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மாற்றப்படுகின்றன. டிஜிட்டல் வகுப்பறைகளில் பாடங்களை நடத்தும் முறைகள்குறித்து சமகரா திட்டத்தின் கீழ் 74,668 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,22,915 ஆசிரியர்கள் பயிற்சிபெற விண்ணப்பித்துள்ளனர். ஹை-டெக் வகுப்பறைகளில், மடிக்கணினி, மல்டிமீடியா புரொஜெக்டர்கள், டிஜிட்டல் திரைகள், அதிநவீன தொழில்நுட்ப ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்' என்று தெரிவித்தார்.