வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:28 (16/07/2018)

‘பில்லியன் முறை முயன்றாலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாது’ - அமைச்சர் விளக்கம்

ஒருவர், பில்லியன் முறை முயன்றாலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் தகவல் பெட்டகம் மிகவும் பாதுக்காப்பாக உள்ளதாகக் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய மக்களின் ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படும் பெட்டகம் என் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவை மூலம் பூட்டப்பட்டுள்ளது. எனவே,  பில்லியன் முறை முயன்றாலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாது. ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் மூன்று கோடி ஆதார்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. இதுவரை 80 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் தகவல்கள், நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை இன்னும் அதிகமாக டிஜிட்டலாக்கும் முயற்சியில் தொடர்ந்து மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 

130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், 121 கோடி பேர் போன் பயன்படுத்துகின்றனர், நாடுமுழுவதும் 450 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் உள்ளன; 50 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர். மொத்தம் 122 கோடி ஆதார் அட்டைகள் உள்ளன. டிஜிட்டல் இந்தியா என்பது சாதாரண மனிதரையும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்துவதற்கான திட்டம்” எனக் கூறினார்.