எவரெஸ்ட் சிகரத்தை 8 முறை தொட்ட பெம்பா ஷெர்பா காரகோரம் மலைத்தொடரில் மாயம்!

எவரெஸ்ட் சிகரத்தை எட்டு முறை ஏறிச் சாதனைபடைத்த பெம்பா ஷெர்பா, காரகோரம் மலைத்தொடர் பகுதியில் காணாமல்போனார். இவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

எவரெஸ்ட்

Photo Credit - Dream Wanderlust

மேற்கு வங்காளம், டார்ஜிலிங் நகரைச் சேர்ந்தவர் பெம்பா ஷெர்பா. மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட பெம்பா, உலகிலேயே மிக அதிக உயரமுடைய எவரஸ்ட் சிகரத்தை எட்டு முறை ஏறிச் சாதனைபடைத்துள்ளார். இந்நிலையில், காரகோரம் மலைத்தொடரில் உள்ள 7,672 மீட்டர் உயரம் கொண்ட சாசர் காங்க்ரி (Saser Kangri) சிகரத்தில் 22 பேர் கொண்ட தன் குழுவினருடன் ஏறியுள்ளார். இந்த நிலையில் பயணத்தை முடித்துக்கொண்டு, கடந்த 13-ம் தேதி திரும்பிய அவர், வழியில் தொலைந்துபோனதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `மலையேற்றத்தை முடித்துவிட்டு கீழே இறங்கிய பெம்பாவைக் காணவில்லை என்ற தகவல் கடந்த வெள்ளியன்று கிடைத்தது. இந்தியா - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் படையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அவரைத் தேடும் பணியில் திபெத்திய போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்' என்றனர். 

இதுதொடர்பாக பெம்பா ஷெர்பாவின் மனைவி தெரிவித்ததாவது, `கடந்த 13-ம் தேதியிலிருந்து அவருடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் காணாமல்போன தகவல், போலீஸார் சொல்லித்தான் தெரியவந்தது. அவர், மீண்டும் திரும்பிவருவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!