கடன் வழங்க மறுத்த நிதி நிறுவன உரிமையாளரை எரித்துக்கொன்றவர் கைது! | One of the murderers arrested

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:45 (16/07/2018)

கடன் வழங்க மறுத்த நிதி நிறுவன உரிமையாளரை எரித்துக்கொன்றவர் கைது!

கேரளத்தில், கடன் வழங்க மறுத்த நிதி நிறுவன உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலைசெய்தவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கொலையாளி கைது

கோழிக்கோட்டில் இயங்கும் மலபார் ஃபைனான்சியர்ஸ் நிதி நிறுவனப் பங்குதாரர், ஷாஜு குருவில்லா (53). கடந்த 13-ம் தேதி, இந்த நிறுவனத்துக்கு வந்த நபர் ஒருவர் 2-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஷாஜு குருவில்லாவை பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். ஷாஜு குருவில்லா உடலில் தீ எரிந்த நிலையில் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே சாக்கடையில் விழுந்த அவர், பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், நிதி நிறுவன அலுவலகத்துக்குப் பின்புறம் ஒரு ஹெல்மெட் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் பாட்டிலைக் கைப்பற்றினர்.

சி.சி.டி.வி கேமராவை ஆய்வுசெய்ததில், சிவப்பு சட்டை அணிந்த நபர் ஷாஜு குருவில்லாவின் அறைக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஆலப்புழாவைச் சேர்ந்த சுமேஷ் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். சுமேஷ்,  நிதி நிறுவனத்துக்கு கடன் கேட்டுச் சென்றதாகவும், தேவையான ஆவணங்கள் இல்லாததால் அவருக்குக் கடன் வழங்க ஷாஜு குருவில்லா மறுத்ததாலும் ஆத்திரமடைந்த சுமேஷ், இரண்டு நாள்களுக்குப் பிறகு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரியவந்துள்ளது.