கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கோயிலில் வைத்து எரிக்கப்பட்ட பெண் - உ.பி-யில் நடந்த கொடுமை!

உத்தரப்பிரதேசத்தில், பெண் ஒருவரை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அருகில் உள்ள கோயிலில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தில், 30 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் 10 வயது மகளுடன் வசித்துவந்துள்ளார். அவரது கணவர் காஸியாபாத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில்,  அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததைப்  பயன்படுத்திக்கொண்ட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், இந்த நபர்கள் வீட்டை விட்டி வெளியேறினர். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நடந்தவற்றைச் சொல்ல தனது உறவினர் ஒருவரைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், இந்தக் குற்றத்தைச் செய்தவர்களின் பெயர்களை தெளிவாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், அவசர காவல் எண்ணுக்கு அழைக்க, யாரும் எடுக்காத காரணத்தால் உறவினருக்கு அழைத்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், உதவிக்கு உறவினர் வருவதுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அந்த நபர்கள் மீண்டும் வந்து, அவரை அருகில் இருக்கும் கோயிலின் குடிசைப் பகுதிக்கு இழுத்துச்சென்று, அங்கு அந்தப் பெண்மீது தீ வைத்துள்ளனர். இதில், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவரை ஒரு கும்பல் இழுத்துச்செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தும் அவர்களில் யாரும் காப்பாற்ற வரவில்லை. 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய கண்காணிப்பாளர் பரத்வாஜ், “பாதிக்கப்பட்ட பெண், தனது உறவினருடன் பேசிய பதிவு எங்களிடம் இருக்கிறது. அதில், அவர் 5 பேர்களின் பெயர்களை தெளிவாகக் கூறியுள்ளார் . இது மிகப்பெரிய ஆதாரம். எனினும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொலைப்பேசியில் தன்னை 5 பேர் கொல்ல வந்துள்ளதாகத்தான் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு முடிவுகள் வந்தால்தான் எதுவும் கூறமுடியும்” என்றார். 

முதற்கட்ட விசாரணையில், இந்தப் பெண் ஒரு இளைஞரைச் சந்திப்பதாகவும், இது தொடர்பாக அப்பெண்ணின் கணவரிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அப்பெண்ணின் உறவினர்கள், கணவர் குடும்பத்தின்மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த வீட்டில் அவருக்கு பாலியல் ரீதியாகத் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாகக் கடந்த வெள்ளியன்று வாக்குவாதம் நடந்ததாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாகத்தான் சனிக்கிழமை இந்தக் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டினர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் 5 பேரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!