`சாரட் வண்டியில் வரக்கூடாது'! - சட்டரீதியாகப் போராடி வென்ற மணமகன் | Dalit groom takes out wedding procession by police protection

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (16/07/2018)

கடைசி தொடர்பு:16:37 (16/07/2018)

`சாரட் வண்டியில் வரக்கூடாது'! - சட்டரீதியாகப் போராடி வென்ற மணமகன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள திருமணம் சாதாரண திருமணம் அல்ல. 150 போலீஸார் புடைசூழ சாரட் வண்டியில் கம்பீரமாக வந்து இறங்கினார் மாப்பிள்ளை.

சாரட் வண்டியில் வரும் மணமகன்

Photo Credit - ANI

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ் அருகில் உள்ள நிசாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதல். இவருக்கு, பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ் என்பவருடன் திருமணம் முடித்து வைக்க சில மாதங்களுக்குமுன் முடிவு செய்யப்பட்டது. இவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்தின்போது, மாப்பிள்ளை சாரட் வண்டியில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த கிராமத்தில் வசிக்கும் வேற்றுச் சமூகத்தினர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாரட் வண்டியில் ஊர்வலமாக வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி, மாப்பிள்ளை அழைப்புக்குத் தடை செய்து விட்டனர். இங்கு, பட்டியலின மக்கள் திருமணத்தின்போது ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மணமகன் சஞ்சய் ஜாதவ், `ஊருக்குள், சாரட் வண்டியில் வந்து திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், `உள்ளூர் போலீஸார் திருமணத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், சுமார் 150-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து மணமகன், மணப்பெண்ணை கம்பீரமாகத் திருமணம் செய்துகொண்டார். 80 ஆண்டுகளாகக்  கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டை தகர்த்து, திருமணம் நடந்த சம்பவத்தால், ஊர் மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். சஞ்சய் ஜாதவ் சட்டப்படிப்பைப் படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.