வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (16/07/2018)

கடைசி தொடர்பு:17:50 (16/07/2018)

விபத்தில் சிக்கியவரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோடி!

மேற்கு வங்கத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், போடப்பட்டிருந்த கூடாரம் ஒன்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர். 

Photo Credit - ANI

பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். பிரதமரின் வருகையையொட்டி தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து உரையாடி வந்தார். இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் மக்கள் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த கூடாரம் ஒன்று எதிர்பாராமல் சரிந்து விழுந்தது. இதனால், கூடாரத்தின் கீழ் அமர்த்திருந்த பல பேர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். 

மோடி

Photo Credit - @amitmalviya

கூடாரம் சரிந்து விழுந்ததையடுத்து, தன் உரையைப் பாதியில் முடித்துக்கொண்டார் பிரதமர். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர், விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, நலம் விசாரிப்பதற்காகச் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரிடம் சென்றார் மோடி. அவரிடம் அப்பெண், ஆட்டோகிராஃப் கேட்டுள்ளார். அவரின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல், மோடி ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். இதை, பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.