வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (16/07/2018)

கடைசி தொடர்பு:18:45 (16/07/2018)

மனைவியை கழுத்தறுத்துக்கொன்ற கேன்சர் கணவர்! சந்தேகத்தால் நடந்த விபரீதம்

மனைவியைக் கொலை செய்த கேன்சர் நோயாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை

நொய்டாவை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாய்ப் பகுதியில் இருந்த புற்றுநோய் அது தீவிர நிலையை அடைந்துள்ளது.  இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மகேஷின் மனைவி இவரிடம்  இருந்து விலகியே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் ஜூலை 11-ம் தேதி மனைவியைக் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகேஷைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் கத்தியைக் கைப்பற்றினர். மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லக்‌ஷர் சிறையில் அடைத்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய காவல்துறையினர், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது சொந்த கிராமத்திலிருந்து சிகிச்சைக்காக நொய்டாவுக்கு மகேஷ் குடிபெயர்ந்துள்ளார். அவரின் மனைவி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலையில்லாமல் இருந்துள்ளார். விசாரணையில், கடந்த சில மாதங்களாக மகேஷிடமிருந்து அவரின் மனைவி விலகி இருந்தது தெரியவந்துள்ளது. அவர் மற்ற ஆண்களுடன் பேசுவது மகேஷை வெறுப்படையச் செய்துள்ளது. வேறு ஆணுடன் தன் மனைவிக்குத் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக மகேஷ் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று மகேஷ் மற்றும் அவரின் மனைவி இருவரும் ஒரே அறையில் உறங்கியுள்ளனர். குழந்தைகள் இருவரும் வீட்டு மாடியில் அவரின் மாமா ராகுல் என்பவருடன் இருந்துள்ளனர். ராகுல் காலையில் எழுந்து பார்த்தபோது சகோதரி கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். புற்றுநோயால் மகேஷின் முகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அதனால் அவரின் மனைவி பயந்த மனநிலையில் இருந்திருக்கலாம்'' என்றனர்.