வெளி உணவுப் பொருள்களுக்கு அனுமதி..! பி.வி.ஆர், ஐநாக்ஸ் பங்குகள் கடும் வீழ்ச்சி

வெளி உணவுகளை மால்களில் அனுமதிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவால் பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் சரிந்துள்ளன. 

பி.வி.ஆர் சினிமாஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் பாப்கார்ன், தண்ணீர், உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள் வெளி உணவுகளை மல்டிபிளக்ஸுகளுக்குள் எடுத்துச் செல்லலாம். அதற்கு அனுமதி மறுப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில உணவுத் துறை அமைச்சர் ரவீந்திர சவான் கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் தெரிவித்தார். 

ரவீந்திர சவான் அறிவிப்பை அடுத்து பி.வி.ஆர், ஐநாக்ஸ் ஆகிய மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையின் அளவீட்டின்படி 3.28 சதவிகிதம் மற்றும் 6.77 சதவிகிதம் குறைந்தது. மகாராஷ்டிராவில் பி.வி.ஆர் சினிமாஸ்க்கு 157 ஸ்கிரீன்களும், ஐநாக்ஸுக்கு 118 ஸ்கிரீன்களும் உள்ளன. அமைச்சரின் உத்தரவு அமலுக்கு வந்தால் பாப்கார்ன், குளிர்பானங்கள் மூலம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் மல்டிபிளக்ஸுகளின் வருமானம் பெரும் அளவில் பாதிக்கப்படும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் லாபத்தில் 25% உணவு வகைகள் மூலம் கிடைக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பி.வி.ஆர் சினிமாஸின் மொத்த லாபத்தில் 28-32 சதவிகிதம் உணவுப் பொருள்கள் விற்பனையின் மூலம் கிடைக்கிறது. மகாராஷ்டிராவில் விற்பனையாகும் உணவுப் பொருள்கள் மூலம் மட்டும் கிடைக்கும் வருவாய், பி.வி.ஆர் சினிமாஸின் மொத்த வருவாயில் 9-11 சதவிகிதமாகும். நெட் பாக்ஸ் ஆபீஸ் வருமானத்தை அடுத்து உணவு, குளிர்பானங்கள் மூலம்தான் மல்டிபிளக்ஸுகளுக்கு அதிக வருமானம் வருகிறது. வெளி உணவுகளை அனுமதித்து, மேலும் பாப்கார்ன், குளிர்பானங்களைக் குறைந்த விலைக்கு விற்குமாறு சட்டம் கொண்டு வந்தால் மல்டிபிளக்ஸுகள் டிக்கெட் விலையை ஏற்றும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெளி உணவுப் பொருள்களை மல்டிபிளக்ஸுகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு இன்னும் சுற்றறிக்கைவிடவில்லை. இந்நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதி நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!