வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (16/07/2018)

கடைசி தொடர்பு:22:12 (16/07/2018)

மகளிர் மசோதாவுக்கு ராகுல்காந்தி ஆதரவு? நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பு

நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகளிர் மசோதாவுக்கு ராகுல்காந்தி ஆதரவு? நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அனைத்துக் கட்சிகளின் மக்களவைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்களவை கட்சித் தலைவர்களுக்கு புதுடெல்லியில் நாளை இரவு விருந்து அளிக்கிறார் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்னைகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பியதால், பெரிய அளவில் அலுவல் ஏதும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஜூலை 18-ல் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என்பதில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த, அந்தக் கட்சிகளின் ஆதரவைக் கோர இருப்பதாக மக்களவை செயலகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. தவிர, ஏற்கெனவே நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற அரசு விரும்புவதாகவும் அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்ற போதிலும் சபாநாயகர் அளிக்கும் விருந்தில் அவர் பங்கேற்கக்கூடும் என்று தெரிகிறது. 

நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுடன் அரசுத் தரப்பில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பி.ஜே.பி அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி, நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக எழுப்பப்பட உள்ள பிரச்னைகள் குறித்து இறுதி செய்கிறார்கள். ஜூலை 1-ம் தேதியுடன் நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு மனதாக துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் அலுவலகத்தில் ஒன்றுகூடி தங்களின் நிலைப்பாட்டை முடிவு செய்ய உள்ளனர்.

முந்தைய கூட்டத் தொடரைப் போன்றே வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தையும் முடக்க இப்போதே எதிர்க்கட்சிகள் தங்களின் வியூகத்தை வகுக்கத் தயாராகி விட்டன. என்றாலும், எப்படியாவது எதிர்க்கட்சிகளை சமாளித்து, மழைக்காலக் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பி.ஜே.பி தீவிரமாக உள்ளது.

மகளிர் மசோதாவுக்கு ராகுல் காந்தி ஆதரவு!

ராகுல் காந்தி - மகளிர் மசோதாவுக்கு ஆதரவுஇந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ``மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும். மகளிரின் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதில், தான் ஒரு போராளி என்று நம் பிரதமர் கூறுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மகளிருக்கு அதிகாரம் வழங்கக்கூடிய இட ஒதுக்கீட்டு மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்த மசோதாவை நிறைவேற்ற நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது" என்று ராகுல் கூறியுள்ளார். தமது இந்தக் கடிதத்தைப் பிரதமருக்கு அனுப்பியிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவும் ஒன்று. தற்போது காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்ற மசோதாக்களின் நிலை என்னவாகும் என்பது எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்