வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:08:14 (17/07/2018)

நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை!

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (18-ம் தேதி) தொடங்க உள்ளது. இது, அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டியிருப்பதால், இந்தத் தொடரை சுமுகமாக நடத்த  ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ளார், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய் கோயல்.

கூட்டத்தொடர்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எம்.பி-க்கள் முற்றிலுமாக முடக்கினர். இதனால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியாமலும், அறிமுகப்படுத்த முடியாமலும்போனது. இந்த நிலையில், கடந்த முறை முடங்கியதுபோல இல்லாமல், எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ள விஜய் கோயல்,``நாடாளுமன்றத்தின் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் தேசியக் கடமை'' என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார் விஜய் கோயல்.

இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, இன்று மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் செயல்படவேண்டிய விதம்குறித்து, டெல்லியில் எதிர்க்கட்சியினர் நேற்று (16-ம் தேதி) ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், ``இந்தச் சந்திப்பு வழக்கமான சந்திப்பாக இருந்தது. அனைத்துக்கட்சிகளும் நாடாளுமன்றம் செயல்படுவதைக் காண முடிவுசெய்துள்ளோம். கடந்த முறை , இரண்டு அவைகளும் நடைபெற விரும்பினோம். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தைச் செயல்படவிடவில்லை. அதற்கான பழி எங்கள்மீது போடப்பட்டது'' என்றார்.  இந்நிலையில், நாளை தொடங்க உள்ள இந்தக் கூட்டத்தொடராவது சுமுகமாக முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க