வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (17/07/2018)

கடைசி தொடர்பு:08:29 (17/07/2018)

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்யும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த 2017 - ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தான் ராணுவத்தால், ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக,  ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தை, இந்திய அரசு அணுகியது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், அவரது மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம்  நிறுத்திவைத்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ்


இந்த விசாரணையில் பாகிஸ்தான், 'குல்பூஷன் சாதாரண மனிதர் கிடையாது, அவர் இந்திய கடற்படை அதிகாரி' எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா, 'குல்பூஷன் ஓய்வுபெற்ற அதிகாரி. அவர், இரான் நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தார். அது தொடர்பாக அங்கு சென்றபோது அவர் கடத்தப்பட்டாரே தவிர, அவர் உளவு பார்க்க பலுசிஸ்தான் செல்லவில்லை' எனக் கூறியது. 

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, இந்தியா தனது கோரிக்கைகளை மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாகத்  தாக்கல்செய்தது. இது தொடர்பாகப் பதிலளிக்க பாகிஸ்தானுக்கு ஜூலை 17-ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இன்று பதில் மனு தாக்கல்செய்ய உள்ளது. இதை பாகிஸ்தானின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.