மோடி பங்கேற்ற கூட்டத்தில் சீருடையில் இருந்த காவலர்களைத் தாக்கிய பா.ஜ.க தொண்டர்கள்! | BJP Workers attacked Policeman In West Bengal

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (17/07/2018)

கடைசி தொடர்பு:08:58 (17/07/2018)

மோடி பங்கேற்ற கூட்டத்தில் சீருடையில் இருந்த காவலர்களைத் தாக்கிய பா.ஜ.க தொண்டர்கள்!

மேற்கு வங்கத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாஜக

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில், மோடி எதிர்க்கட்சியினரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, திடீரென பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்தனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மோடி  சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது ஒரு புறம் இருக்க, மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதுக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் லாரி, வேன், கார் போன்றவற்றில் மிட்னாப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர்களுக்கு முன்னாலேயே அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இனிமேல் வாகனங்களில் செல்லமுடியாது; அனைவரும் நடந்துசெல்லுங்கள் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். அதில் கோபமடைந்த தொண்டர்கள், 12-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலீஸாரை சாலையில் வைத்தே கம்பி மற்றும் காலணிகளால் தாக்கியுள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் சிலரையும் பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலால் 7 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அம்மாநில பா.ஜ.க நிர்வாகி திலீப் கோஷ், “ காவலர்கள் தாக்கப்பட்டதுக்கு மிகவும் வருந்துகிறேன். ஆனால், காவலர்களால் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய முடியவில்லை. சில கிலோ மீட்டர்களுக்கு முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தி மட்டுமே எங்களுக்கு வந்துள்ளது”  எனக் கூறியுள்ளார்.