வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:13:00 (17/07/2018)

வீட்டுக்கே வரும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்கள்..! கலக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு

வாகன ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டம், டெல்லியில் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து செயல்பட உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரசால், குடிமகன்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவெடுத்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்தத் தனியார் நிறுவனம் அமைக்கும் கால் சென்டர் மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சேவையின்மூலம், சாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலையும் சான்றிதழ்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களும் வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சான்றிதழ் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். அரசு அலுவலகர்கள், அவர்களது வீடுகளுக்குச் சென்று, டிஜிட்டல் முறையில் தேவையான ஆதாரங்களைப் பதிவுசெய்துகொள்வர். வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மட்டும், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.