`2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன்'- பிரதமர் மோடி உறுதி!

`2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன்'- பிரதமர் மோடி உறுதி!

``கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை, 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்துவதே அரசின் லட்சியம்" என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

மோடி

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நேற்று (16.07.2018) நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ``விவசாயிகள், நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர்கள். விவசாய விளைபொருள்களின் அடிப்படை ஆதார விலையை ஒன்றரை மடங்கு உயர்த்தியது அரசின் முக்கியமான வரலாற்றுச் சாதனை. விவசாயிகளைப் புறக்கணிக்கும் எந்தச் சமுதாயமும் முன்னேற்றமோ மேம்பாடோ அடைய முடியாது. புதிய இந்தியாவைப் படைக்க 125 கோடி இந்தியர்களும் கடினமாக உழைத்துவருகிறார்கள்” என்றார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி. மிட்னாப்பூரில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், ``மேற்குவங்க மக்களிடம் புதிய எழுச்சியைப் பார்க்கிறேன். அதிக மழை மற்றும் இதரத் தடைகளையும் தாண்டி பொதுக்கூட்டத்துக்கு அதிக அளவில் திரண்டிருக்கிறீர்கள். கூரை சரிந்தாலும் அமைதியாகக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். இதுபோல் நான் எங்கும் பார்த்ததில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்தக் கூட்டத்தை மறக்க முடியாது” என்றார் மோடி. 

பிரதமர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட கூரை சரிந்தது. இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் 24 பேர் பெண்கள். கூரை சரிந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும்படி பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்ட பிரதமர், பொதுக்கூட்டம் நடந்து முடிந்தவுடன் மேற்கு மிட்னாப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். கூரை சரிந்த சம்பவம் குறித்து, மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறது பிரதமர் அலுவலகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!