மனோகர் பாரிக்கரின் அதிரடிக்குக் காரணமான சிதறிக்கிடந்த மது பாட்டில்கள்! #Goa

கோவாவில், பொது இடங்களில் மது அருந்துவோருக்கு அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் செக் வைத்துள்ளார்.

மனோகர் பாரிக்கர்
 

இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான கோவா, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறிவிட்டது. இந்திய இளைஞர்கள், சுற்றுலாத் திட்டத்தில் கண்டிப்பாக `கோவா’ பெயர் இடம்பெறுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் கோவாவில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

கோவாவில் நேற்று (17-07-2018)  நடந்த நிகழ்ச்சியொன்றில் ஆவேசமாகப் பேசிய மனோகர் பாரிக்கர், `குடிமைப் பொறுப்பு ( civic responsibility) என்று ஒரு வார்த்தை உள்ளது. இங்கு பலருக்கு அதுபற்றித் தெரியவில்லை. ஏன் இப்படிச் செய்கிறார்கள்  என்று தெரியவில்லை. பனாஜியில், நதியோரம் உள்ள சாலையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். பொது இடங்களில் மது அருந்துவோருக்கு, வரும் ஆகஸ்டு 15 முதல்  அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதேபோன்று,  மண்டோவி நதியில் மதச் சடங்குகளுக்காக மலர்களைத் தூவுகின்றனர், அதில் தவறில்லை. ஆனால் பூக்களை பிளாஸ்டிக் பையில் சுற்றி நதியில் வீசுகிறார்கள். அது மிகவும் தவறு. தினமும் சாலைகளைச் சுத்தம் செய்கிறார்கள். ஆனாலும் சுத்தம் செய்த சில நிமிடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். எனவே இனி சுற்றுலாத் தளங்களில்  பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்போருக்கு, 100 ரூபாயில் இருந்து அதிகபட்ச அபராதமாக 2,500 ரூபாய் வரை விதிக்கப்படும். இனியாவது இதுபோன்ற செயல்கள் குறைகிறதா என்று பார்க்கலாம்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!