வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (17/07/2018)

கடைசி தொடர்பு:15:36 (17/07/2018)

பெற்றோர்களைக் கவனிக்காவிட்டால்..! - மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அளித்த சொத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முதியவர்

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் மனைவி இறந்த பிறகு, அவர் இரண்டாவது திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அப்போது முதியவரின் மகனும், மருமகளும் ஏதேதோ பேசி அவரிடம் இருந்த குடியிருப்பில் 50 சதவிகிதத்தை கடந்த 2014-ம் ஆண்டு தங்களின் பெயரில் எழுதி வாங்கியுள்ளனர். முதியவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டபின் மகனும், மருமகளும் முதியவரையும் அவரின் மனைவியையும் கவனிக்காமல் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். மேலும், அந்தேரி குடியிருப்பிலிருந்து இருவரும் வெளியேற வேண்டும் எனவும் தன் தந்தையிடம் கூறியுள்ளார் மகன். 

இந்நிலையில், மும்பை முதியவர்கள் தீர்ப்பாயத்தை நாடியுள்ளார் அந்த முதியவர். அங்கு அவரின் மகனுக்கு வழங்கிய சொத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிறகு இதை எதிர்த்து அவரின் மகன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சித் மோரி மற்றும் அனுஜா பிரபுதேசாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதன் முடிவில் முதியோர் பாதுகாப்புச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு அளித்த சொத்துகளைப் பெற்றோர்களேத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமையுண்டு எனக் கூறி தீர்ப்பாயத்தின்  உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினர்.