`இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது!' | Women entrepreneurs must for India to grow at 9-10%, says NITI Aayog CEO Amitabh Kant

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/07/2018)

`இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது!'

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்க, பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு தேவை என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சாலை பணியில் பெண்கள்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக் சார்பில் பங்கேற்றுப் பேசிய அமிதாப், ``2017-18-ம் நிதியாண்டில் நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 7.7% ஆகக் காணப்பட்ட நிலையில், இது இன்னும் 30 ஆண்டுகளில் 9 -10 சதவிகிதத்தை எட்ட, பெண் தொழில்முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் தேவை'' என்றார்.

ஹரியானா மாநிலத்தில், குறிப்பிட்ட மாவட்டங்களில் பெண்களுக்குப் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து போன்றவை கிடைக்கும் வாய்ப்பைத் தடுக்கும் வகையில் அங்கு செயல்படும் காப் பஞ்சாயத்துகள் ( கட்டப் பஞ்சாயத்துகள்) செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்றவை ஏற்பட்டு, சமூகத்தின் தலைமுறை இடைவெளி சுழற்சி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை. ஜிடிபி வளர்ச்சியில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பு 44 - 45 சதவிகிதமாக உள்ள நிலையில், இந்தியாவில் அது 22 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி விகிதம் சீராக வளர்ச்சியடைந்து, அடுத்த 30 ஆண்டுகளில் 9 -10 சதவிகிதத்தை எட்ட வேண்டுமெனில் பெண் தொழில்முனைவோர்களின் பங்களிப்பு அதற்கு அவசியமாக உள்ளது.

எப்போதெல்லாம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்தியா மாற்றமடைய வேண்டும் என்றால், பெண் தொழில்முனைவோர்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று அவர் மேலும் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க