வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:21 (17/07/2018)

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம்! - 17.07.2018

வங்கி, எண்ணெய், உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளைச் சேர்ந்த பங்குகள் விலை உயர்ந்ததால் இன்று இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் நல்ல முன்னேற்றம் கண்டன.

கச்சா எண்ணெயின் விலை சரிவு, பொதுத்துறை வங்கிகள் சிலவற்றில் முதலீடு உட்புகுத்த அரசு தீர்மானித்திருப்பது மற்றும் அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது இவை காரணமாக இன்று சந்தையின் மன நிலை உற்சாகமாகவே காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 196.19 புள்ளிகள் அதாவது 0.54 சதவிகிதம் உயர்ந்து 36,519.96 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 71.20 புள்ளிகள் அதாவது 0.65 சதவிகிதம் முன்னேறி 11,008.05-ல் முடிவுற்றது.

இனி சந்தையின் இன்றைய முன்னேற்றத்துக்கான காரணங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம் :

1. கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை சரிந்து பேரலுக்கு 66.72 டாலர்கள் என்றானது இந்திய ஆயில் நிறுவனங்களின் பங்குகளின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. லிபியா நாட்டின் நான்கு துறைமுகங்களிலிருந்து மீண்டும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பது, OPEC நாடுகள் மற்றும் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்திருப்பது மற்றும் IMF அறிக்கைபடி, உலக பொருளாதார வளர்ச்சி சற்று தளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புள்ளதாக இருக்கும் நிலையில் கச்சா எண்ணெய் டிமாண்ட் சற்று குறையக்கூடும் என்பதாலும் கசிச்சா எண்ணையின் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

 2. எண்ணெய் விலை குறைவால் ஆட்டோமொபைல் துறை பங்குகளின் விலைகளும் கூடின. 

3. கார்பொரேஷன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளில் ருபாய் 10,000 கோடி அளவு முதலீடு உட்புகுத்த அரசு தீர்மானித்திருப்பது, வங்கித்துறை பங்குகளில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவியது.

4. டாலருக்கெதிராக இந்திய ரூபாய் இன்று சற்று மதிப்பு உயர்ந்து டாலருக்கு 68.27 என்ற அளவுக்கு முன்னேறியதும் சந்தையின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 7.1%
பாரத் பெட்ரோலியம் 3%
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 4.9%
ஹின்டால்கோ 3%
ஆக்ஸிஸ் பேங்க் 3%
ஸ்டேட் பேங்க் 2.9%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 2.9%
பேங்க் ஆஃப் பரோடா 6.8%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 6.5% 
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் 5.4%
மஹிந்திரா & மஹிந்திரா 2.6%
டாடா மோட்டார்ஸ் 2.5%
சிப்லா 2.5%

விலை சரிந்து பங்குகள் :

ஹிந்துஸ்தான் யூனிலீவர் 3.6%
பார்தி ஏர்டெல் 1.4%
பி.சி.ஜிவெல்லெர் 8%
ஆர்.எஸ். சாப்ட்வேர் 6.6%
இன்று மும்பை பங்குச் சந்தையில் 1442 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1123 பங்குகள் விலை சரிந்தும்,  155 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.