வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (17/07/2018)

கடைசி தொடர்பு:21:31 (17/07/2018)

எம்.பி-க்களுக்கு ரூ.1 லட்சத்தில் ஐபோன்! - சர்ச்சையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததால் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கர்நாடக எம்.பி-க்களிடமும் கர்நாடக ஆட்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தரும் நெருக்கடி குறித்து ராகுலிடம் பேசவும் இரண்டு நாள் பயணமாகத் தலைநகர் டெல்லி சென்றுள்ளார் முதல்வர் குமாரசாமி. டெல்லியில் முகாமிட்டுள்ள இந்தச் சமயத்தில் கர்நாடக எம்.பி-க்களுக்கு முதல்வர் குமாரசாமி 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன் வழங்கிய சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குமாரசாமி வழங்கிய ஐபோன்

எம்.பி-க்களுக்கு ஐபோன்..? காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக விவசாயிகள் பருவ நிலைக்கு ஏற்ப பயிர் செய்ய வேண்டும் என்ற விதிமுறை கர்நாடகாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எந்தப் பயிரை பயிர் செய்ய வேண்டும் என்பதைக் கர்நாடக விவசாயிதான் முடிவு செய்ய வேண்டும். அதைக் காவிரி மேலாண்மை வாரியம் முடிவு செய்யக் கூடாது. இதுபோன்ற விதிமுறைகளைக் காவிரி மேலாண்மை வாரியத்திலிருந்து நீக்க வேண்டும். அதற்காக மத்திய அரசின் கவனத்தைப் பெறும் வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி-க்கள். கட்சி வேறுபாடு இன்றி நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி பேச உள்ளார். 

இதுகுறித்து கர்நாடக எம்.பி-க்களை முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேச வரும் 18ம் தேதி இரவு 7 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு, கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக, கர்நாடக எம்.பி-க்கள் அனைவருக்கும் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோனும், ஒரு லெதர் பேக்கும் வழங்கியுள்ளனர். மக்கள் வரிப் பணத்தில் எம்.பி-க்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பில் ஐபோனா... என்று கர்நாடக மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திவிடவே, முதல்வர் குமாரசாமியிடம் கேள்வி எழுப்பியதற்கு, `அப்படியா... எனக்கு எதுவும் தெரியாதே... விசாரித்துச் சொல்கிறேன்’ என்று பதில் அளித்து சமாளித்தார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், எம்.பி-க்களுக்கு நான்தான் ஐபோன் வழங்கினேன். எனது நீர் பாசனத்துறையின் மூலம் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எனது சொந்த செலவில் எம்.பி-க்களுக்கு ஐபோன் வழங்கினேன் என்றார். அவரிடம், பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் ஐபோனை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளனரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு, வசதி படைத்தவர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.