நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு எம்பியும் எவ்வளவு நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றம் 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 543 பேர் தேர்வானார்கள். இவர்கள் எவ்வளவு நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வருகைபுரிந்தனர் என்பதையும், எத்தனை விவாதங்களில் பங்குபெற்றுள்ளனர் என்ற விவரம் நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.  

கேள்விகள் கேட்பதிலும், விவாதங்களில் பங்கு பெறுவதிலும் தென் மாநிலங்களைச் சேர்ந்த எம்பிகள் யாரும் முதல் பத்து இடங்களில்  இடம்பெறவில்லை. ஒட்டுமொத்த விவாதங்களிலும் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பைக் கணக்கிட்டதில் கேரளாவைச் சேர்ந்த எம்.பி.கள் மட்டுமே அதிகளவில் விவாதத்தில் பங்குபெற்றுள்ளனர். இவர்கள் 2355 விவாதங்கள் பங்குபெற்று மூன்றாவது இடம்பிடித்துள்ளனர். முதலிடத்தில் உத்தரபிரதேசமும், இரண்டாவது இடத்தில் ராஜஸ்தானும், மகாரஷ்ட்ராவும் உள்ளன. ஒவ்வொரு எம்.பி.களின் சராசரி விவாதங்களில் திரிபுராவைச் சேர்ந்த எம்பிகள் முதலிடத்திலும், கேரளாவைச் சேர்ந்த எம்.பி.கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.களில் 90 சதவிகிதத்துக்கு கூடுதலாக வருகைப் பதிவு கொண்டவர்கள் யாருமில்லை. தமிழ்நாட்டில் 50 சதவிகிதத்துக்கு குறைவான வருகைப் பதிவு கொண்டவராக பட்டாளி மக்கள் கட்சியின் எம்பி அன்புமணி உள்ளார். இவர், நாடாளுமன்றத்துக்கு 47 சதவிகிதம் மட்டுமே வருகை புரிந்துள்ளார்.

பி.ஜே.பி.யின் எம்.பி.களான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பைரன் பிரசாத் மிஸ்ரா, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கோபால் சினய்யா ஷெட்டி மற்றும் ஹரியானவைச் சேர்ந்த ரமேஷ் சாந்தர் கௌஷிக் ஆகியோர் 100 சதவிகிதம் வருகைபுரிந்துள்ளனர். இதைப்போலவே, பிஜு ஜனதா கட்சியைச் சேர்ந்த குலாமணி சாமாவும் அனைத்து நாட்களிலும் வருகை தந்துள்ளார். முதல் முறையாக உத்தரபிரதேசத்தில் பண்டா தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ள மிஷ்ரா அதிகளவில் விவாதங்களில் (1722) பங்கேற்றும், அதிகளவில் கேள்விகள் கேட்டும் முதலிடம் பிடித்துள்ளார்.  

சிவசேனா கட்சி எம்.பி அரவிந்த் சவாந்த், பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த ஹரீஷ் சந்திரா மீனா, ராஜேஷ் குமார் திவாகர் ஆகியோர் 99 சதவிகிதம் வருகை தந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 74 பேர் 90 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வருகைபுரிந்துள்ளனர்.  

மக்களவை கூடும்போது முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாகச் செயல்படும். இந்த நேரத்தில் அனைத்து அமைச்சகம் குறித்தும் கேள்விகள் கேட்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கப்படும். மற்ற கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கப்படும்.  மக்களவையில் முதல் மணி நேரத்தில் அதிகளவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி.களே பயன்படுத்தி உள்ளனர். பத்து கேள்விகளில் 9 கேள்விகள் இவர் எழுப்பி உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்பிரியா சுலே இதுவரை 983 கேள்விகள் கேட்டுள்ளார். இவருடைய கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்பி தனஞ்சயன் பீமிரோ மகாதிக் 970 கேள்விகளை எழுப்பி உள்ளார்.  

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகளவில் பங்குபெற்றுள்ளனர். விவாதங்களில் அதிகம்பங்கேற்றவர்கள் 95 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வருகைபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விவாதங்களில் பங்கேற்றவர்களில் முதல் பத்து இடங்களில் ஒன்பது பேர் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  மற்றொருவர் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி ரபீந்திர குமார் ஜெனா. இவர் முதல் முறையாக பாலசோர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானவர். இவர், 269 விவாதங்களில் 448 கேள்விகளைக் கேட்டுள்ளார். 12 சட்டத் திருத்த மசோதாக்களிலும் பங்குப்பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு எம்.பியும் அரசு சார்பில் பல்வேறு சலுகைகளை பெற்றுவரும் நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்தில் பங்குப்பெறுவது மிகவும் குறைவாக இருக்கிறது. மேற்கண்ட தகவல்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!