வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (18/07/2018)

கடைசி தொடர்பு:11:03 (18/07/2018)

தாஜ்மகால் குறித்த மத்திய அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!

``இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தயாரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு இருக்கிறது'' என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 

தாஜ்மஹால்

நம் நாட்டில் உள்ள பாரம்பர்யமிக்க நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் பணியை, மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்று.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், ``இந்தத் திட்டத்தின்மூலம் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைப் பராமரிக்கவும், விரிவுபடுத்திப் பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது, மத்திய சுற்றுலாத் துறையின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று'' என்றார். மேலும் அவர், டெல்லியில் உள்ள செங்கோட்டைப் பகுதியை, தனியார் சிமென்ட் நிறுவனம் ஒன்று பராமரித்துவருவதை மேற்கோள் காட்டிப் பேசிய கே.ஜே.அல்போன்ஸ், ``இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை, செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பராமரித்துவரும்நிலையில், தாஜ்மகாலைத் தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது, நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதுடன், கண்டனங்களும் குவியத் தொடங்கியிருக்கின்றன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில அரசு, உலக அதிசயமான தாஜ்மகாலைப் பராமரிப்பதில் முறையாகச் செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலைப் பராமரிப்பதற்கான எந்தத் திட்டமும் மாநில அரசிடம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க