அடுத்தடுத்து சரிந்த இரண்டு கட்டடங்கள் - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

நொய்டா அருகே உள்ள சபேரி என்ற கிராமத்தில், ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் நேற்று திடீரெனச் சரிந்துவிழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டடம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ளது சபேரி கிராமம். இங்கு, நேற்றிரவு 10 மணியளவில் ஏதோ நொறுங்கியது போன்று பெரும் சத்தம் கேட்டுள்ளது.  வீட்டை விட்டு  வெளியில் வந்து பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சபேரி கிராமத்தில்  ஆறு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அதன் அருகில் இருந்த மற்றொரு நான்கு மாடி குடியிருப்பின்மீது சரிந்திருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர்  வந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையினரும்  விபத்துப் பகுதிக்கு விரைந்து வந்து உடனடி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சரிந்த ஆறு மாடிக் கட்டடம் புதிதாகக் கட்டப்பட்டுவருவது தெரியவந்துள்ளது. அருகில் இருந்த  நான்கு மாடிக் கட்டடத்தில் 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருவதாகவும்,  இடிபாடுகளில் 20-25 பேர் சிக்கியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. விபத்துகுறித்த காரணம் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்தை அறிந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்ய, உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த விபத்து காரணமாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!