திறக்க முடியாத கதவுகள்! - ஆம்புலன்ஸிலேயே இறந்த 2 மாத குழந்தை

ராஜ்பூரில் ஆம்புலன்ஸ் கதவுகள் திறக்க முடியாமல் பூட்டிக்கொண்டதால், இரண்டு மாதக் குழந்தை ஆம்புலன்ஸ் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குழந்தை

பீகாரைச் சேர்ந்தவர் அம்பிகா குமார். இவரின் இரண்டு மாத குழந்தைக்கு இருதய அறுவைசிகிச்சைக்காகச் சத்தீஸ்கரில் தன் மனைவியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் தன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சஞ்சீவினி எக்ஸ்பிரஸ் என்ற இலவச ஆம்புலன்ஸை புக் செய்திருந்தார். அதன்படி நேற்று காலை தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சத்தீஸ்கர், ராஜ்பூரில் உள்ள பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றதும் வண்டியைவிட்டு இறங்க முடியாமல் ஆம்புலன்ஸின் கதவுகள் இறுக்கமாகித் திறக்க முடியாமல் போயுள்ளன. நீண்ட நேரமாகப் பலர் போராடியும் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதனால் சுமார் 30 நிமிடங்களாகக் காற்று இல்லாமல் உள்ளேயே இருந்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

பின்னர், இது பற்றி கூறிய அம்பிகா குமார், “என் குழந்தைக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக ராஜ்பூர் மருத்துவமனைக்கு வந்தோம். அப்போது ஆம்புலன்ஸ் கதவுகள் திறக்க முடியாததால் என் குழந்தை உள்ளேயே சிக்கி இறந்துவிட்டது. கதவு திறக்க முடியாமல் போன பிறகு, வண்டியின் ஜன்னல் மற்றும் கதவுகளை நான் உடைக்க முயன்றேன். இது அரசு வாகனம் என்பதால் சேதப்படுத்தக் கூடாது எனக் கூறி என்னை உடைக்க விடவில்லை” எனக் கூறியுள்ளார். 

சஞ்சீவினி ஆம்புலன்ஸை ஜி.வி.கே அவசர நிலை மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் நடத்தி வருகிறது. பின்னர், இது குறித்து பேசிய அதன் நிர்வாகி சிபு குமார், ``ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த பிறகு, வண்டியின் கதவு திறக்க முடியாமல் போயுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸின் ஜன்னல் உடைக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில்தான் குழந்தை இறந்தது எப்படி என்பது உறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!