``ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் 50 பைசா!” - பீகாரின் தாகம் தீர்க்கும் புதிய திட்டம் | 1 litre water 50 paise New water scheme in Bihar

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (18/07/2018)

கடைசி தொடர்பு:15:26 (18/07/2018)

``ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் 50 பைசா!” - பீகாரின் தாகம் தீர்க்கும் புதிய திட்டம்

இன்றைய நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 50 பைசா என்றால் அது புரட்சிதானே... அதுவும் அசுத்தமான தண்ணீரை சுத்தமான தண்ணீராக மாற்றி லிட்டர் 50 பைசாவுக்குக் கொடுக்கப்போகிறார்கள்.

``ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் 50 பைசா!” - பீகாரின் தாகம் தீர்க்கும் புதிய திட்டம்

ஞ்ச பூதங்களில் நிலத்துக்கு அடுத்தபடியாக விலை வைக்கப்பட்டிருப்பது நீருக்குத்தான். இயற்கை நமக்காக அளித்த பெருங்கொடைகளில் முக்கியமானது காற்றும், நீரும்தான். இன்றைய கார்ப்பரேட் உலகில் குடிநீர் நிலை தலைகீழாக மாறிவிட்டது. தண்ணீருக்கு அடுத்தபடியாக காற்றையும் விலைவைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன் உச்சகட்டம் அமெரிக்காவில் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட பிவர்லி ஹில்ஸ் நிறுவனம் ஒரு லிட்டர் குடிநீரை 55 லட்சத்துக்கு விற்பனை செய்வதாகச் செய்திகள் வெளியானதுதான். இச்செய்தி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஒரு லிட்டர் குடிநீர் 50 பைசா

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசே தண்ணீருக்கு விலை வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. அதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்துக்குத் தண்ணீரை விலை வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப பல இடங்களில் வறட்சியும் அதன் உக்கிரத்தைக் காட்டி வருகிறது. இந்நிலையில் சத்தம் இல்லாமல் பீகார் தண்ணீரில் ஒரு புரட்சியைச் செய்துள்ளது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 50 பைசா என்றால் அது புரட்சிதானே... அதுவும் அசுத்தமான தண்ணீரை சுத்தமான தண்ணீராக மாற்றி லிட்டர் 50 பைசாவுக்குக் கொடுக்கப்போகிறார்கள். அப்படிக் கொண்டுவந்தால் உலகிலேயே குறைவான விலை கொண்ட குடிநீர் இதுவாகத்தான் இருக்கும். 

சுலப் என்ற சர்வதேச அமைப்பு `சுலப் சௌஜல்யா' (Sulabh Shauchalya) எனும் திட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தது. அத்திட்டத்தின் மூலம் மக்களுக்குத் தேவையான குடிநீரைக் குறைந்த செலவில் கொடுக்க முடிவு செய்தது. இத்திட்டத்தின் மூலம் மாசடைந்த ஆறு, குளம் ஆகியவற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, சுத்திகரித்து ஒரு லிட்டர் 50 பைசா விலைக்குக் கொடுக்கவிருக்கிறது. 
மேற்கு வங்காள மாநிலத்தில், முர்ஸிதாபாத் மற்றும் நடியா ஆகிய இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் நிறுவனத்தின் உதவியோடு தொடங்கப்பட்ட திட்டம் சோதனை முறையில் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. அப்போது இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று பீகார் மாநிலம், தார்பங்கா தேர்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தைத் தொடங்க குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் செலவாகும். 

தண்ணீர்

இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 14-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. அடிக்கல் நாட்டிப் பேசிய சுலப் நிறுவனத்தின் நிறுவனர் பின்டேஸ்வர் பதக், ``குறைந்த விலையில் தண்ணீரைக் கொடுக்கவிருக்கிறோம். அதற்கான சோதனை முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஒரு லிட்டர் குடிநீர் 50 பைசாவுக்கு உலகின் எந்த மூலையிலும் கிடையாது. இத்திட்டத்தை முதற்கட்டமாக பீகார் மாநிலம் தர்பங்காவில் செயல்படுத்தவிருக்கிறோம். வரும் டிசம்பர் மாதம் முதல் இத்திட்டம் செயல்படத் துவங்கும். ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 லட்சம் லிட்டர் வரை குடிநீர் சுத்திகரிக்கலாம். பீகாரின் வட பகுதிகளில் ஆர்செனிக் போன்ற வேதிப்பொருள்கள் அதிகமாகக் கலந்துள்ளதால், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் பலர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இத்திட்டம் தொடங்கியிருப்பதால் மக்களின் நிலை நிச்சயமாக மாறும். கொல்கொத்தாவில் உள்ள பர்கானாஸ் மாவட்டத்தில் மத்துசுதன் காந்திகிராமம் என்ற இடத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் குளம் போன்ற வடிவத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சுலப் நிறுவனம் அமைத்தது. அதற்கு முன்னர் வரை மக்கள் நல்ல தண்ணீர் கிடைக்காமல் குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். இப்போது மக்களின் குடிபெயர்வு இல்லை. அதனால் விரைவில் இத்திட்டத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்" என்றார். 

``ஒரு லிட்டர் குடிநீர் 50 பைசாவுக்குக் கொடுப்பது நல்ல விஷயம்தான். அசுத்தமான தண்ணியை சுத்தமாக்குவதோடு அந்நிறுவனம் நிறுத்திக்கொண்டால் நல்லது. நிலத்தடி நீருக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி" என்ற குரல்களும் எழத்தான் செய்கின்றன. 


டிரெண்டிங் @ விகடன்