600 விவசாயிகள் பேரில் ரூ. 5,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் | A Businessman had allegedly Got 5,400 Crores Loans In Farmers' Name

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/07/2018)

கடைசி தொடர்பு:17:15 (18/07/2018)

600 விவசாயிகள் பேரில் ரூ. 5,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர்

விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி மொத்தம் 5,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் மகாராஷ்ட்ராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். 

தொழிலதிபர்

Photo Credits: Facebook/Dr.RatnakarGutte

மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்னாகர். இவர் அதே மாவட்டத்தில் காங்கேட் சர்க்கரை மற்றும் எரிசக்தி லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த நிறுவனத்துக்கு கரும்பு பயிரிட்டு சப்ளை செய்து வருந்துள்ளனர். அதற்கு தவணை முறையில் காங்கேட் நிறுவனம் பணம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகள் அனைவருக்கும், கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதைப் பார்த்து ஸ்தம்பித்த விவசாயிகள் வங்கியில் நேரடியாகச் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது வங்கி சொன்ன பதிலை கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காங்கேட் நிறுவனம் பயிர் அறுவடை, விவசாய கடன், போக்குவரத்துத் திட்டம் என்று விவசாயிகள் அனைவரும் கூட்டாக இந்த நிறுவனத்தில் இணைந்து கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகப் போலி ஆவணங்களைக் காட்டி அந்நிறுவனமே வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. சுமார் 600 விவசாயிகளுக்கு மொத்தம் 5,400 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனுக்காக பல்வேறு இடங்களில் 22 போலி நிறுவனங்களையும் காங்கேட் நிறுவனம் தொடங்கியுள்ளது எனத் தற்போது தெரியவந்துள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு வங்கிகளிலிருந்து கடன் வழங்கபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத தொழிலதிபர் ரத்னாகர் தற்போது வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்ட்ரா எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.