`மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!' - ஜூலை 20-ம் தேதி காரசார விவாதம் | Lok Sabha to discuss no-confidence motion on Friday, BJP leaders say ‘we are ready’

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (18/07/2018)

கடைசி தொடர்பு:20:22 (18/07/2018)

`மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!' - ஜூலை 20-ம் தேதி காரசார விவாதம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் 20-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் வெளியான பிறகு ஆளும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம். ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததைக் காரணம் காட்டி கூட்டணியிலிருந்து பிரிந்தார் சந்திரபாபு நாயுடு. கூட்டணியிலிருந்து பிரிந்தவுடன் பா.ஜ.க.வை கடுமையாகச் சாடிய அவர், மத்திய அரசின் திட்டங்களையும் எதிர்த்து வருகிறார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஆந்திர கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்தன. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் மற்ற மாநிலக் கட்சித் தலைவர்களைச் சந்தித்தும் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கையின் பலனாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. 

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர். இதுகுறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ``50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பதால் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தர்மேந்திர பிரதான், ``இந்திய மக்கள் நம்பிக்கையுடன் பிரதமர் மோடியைத் தேர்வு செய்துள்ளனர். அதனால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு விவாதத்துக்குப் பின் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். வரும் 20-ம் தேதி இதற்கான விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்துக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பதவியேற்று 4 ஆண்டுகளை முழுமை செய்துள்ள பா.ஜ.க முதல்முறையாக வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க