காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம்... அனுமதித்த மக்களவைத் தலைவர்!

மாநிலங்களவையைப் பொறுத்தமட்டில், பி.ஜே.பி-க்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாதபோதிலும் அ.தி.மு.க. உள்ளிட்ட வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம்... அனுமதித்த மக்களவைத் தலைவர்!

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கம்போல் எதிர்க்கட்சிகளின் அமளியுடனேயே தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டும் என அரசு விரும்புகிறது. எந்தவொருக் கட்சியானாலும் அந்தக் கட்சியின் பிரச்னைகள் எதுவானாலும் அதை அவையில் எழுப்பலாம். அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது" என்றார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் செய்தியில், இந்தக் கூட்டத்தொடரின் அலுவல்கள் மற்றும் கட்சிகளின் ஆக்கபூர்வமான விவாதங்கள், பல்வேறு மாநிலச் சட்டசபைகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

என்றாலும், இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் போன்ற கடும் சவால்களுடனேயே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்றே அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்த சுமித்ரா மகாஜன், "அவையில் இந்தத் தீர்மானம் எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது பற்றி 10 நாள்களில் முடிவு செய்யப்படும்" என்றார்.

எம்.பி பதவியிலிருந்து விலகிய ஆந்திர மாநிலத்தின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி-க்களின் ராஜினாமாவை அவர் ஏற்றுக்கொண்டார்.

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அனுமதி கோரி, கடும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முற்றுகையிட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியும், அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியபடியும் அவர்கள் கூச்சலில் ஈடுபட்டதால், அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறப்பினர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அதற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. 

அனந்த குமார் - நம்பிக்கையில்லா தீர்மானம்இந்தத் தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது" என்றார். 

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நான்கு புதிய உறுப்பினர்கள், எம்.பி-க்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நாடாளுமன்றம் காலையில் கூடியதும் மக்களவையில் உறுப்பினர்களாக இருந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரின. ஆனால், அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால், எதிர்க்கட்சிகள் முந்தைய கூட்டத்தொடரை முழுமையாக முடக்கின. அலுவல்கள் ஏதும் நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால், கடந்த கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கியது.

ஆனால், இந்தமுறை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எப்போது எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அறிவிக்காவிட்டாலும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, வரும் 20-ம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பின்னர், ஆளும் தரப்பில் பிரதமர் பதில் அளிப்பார். அதன் பிறகு, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். ஆளும் பி.ஜே.பி-க்கு மக்களவையில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதால் மக்களவையில் இந்தத் தீர்மானம் அரசுக்கு ஆதரவாகவே அமையும். மாநிலங்களவையைப் பொறுத்தமட்டில், பி.ஜே.பி-க்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாதபோதிலும், அ.தி.மு.க உள்ளிட்ட வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர், மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!