தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்!

தன் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சசி தரூர் பற்றிய கட்டுரை...

ர்ச்சைக்குரிய கருத்தைப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து நேற்று தொடங்கிய நாடாளுமன்ற அவையில் பேசிய சசி தரூர், ``தேச விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தனது மெளனத்தினைக் கலைக்க வேண்டும்'' என்றார்.

சசி தரூர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சசி தரூர்,``2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெற்றால் இந்திய நாடு, `இந்து - பாகிஸ்தானாக மாறிவிடும்'. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் எதற்காகப் போராடினார்களோ.... அது, இல்லாமல் போய்விடும். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. வெற்றிபெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து போய்விடும்; புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும்'' என்று பேசியிருந்தார். இது, நாட்டு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவுசெய்த சசி தரூர், பி.ஜே.பி-யினர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி கேரளாவின் பச்சலூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற சசி தரூருக்கு எதிராகப் பி.ஜே.பி. தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி கோஷம் எழுப்பினர். 

இந்த நிலையில், நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தான் சந்தித்த பிரச்னைகளை மையமாக வைத்துப்  பேசிய சசி தரூர், ``மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில், அரசியலமைப்பின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகிய அடிப்படை விதிகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. வலதுசாரி அமைப்புகள் உயிருக்கு அச்சுறுத்தல்களையும் மற்றும் அலுவலகம் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்'' என்றவர், சுவாமி அக்னிவேஷ் மீது ஜார்க்கண்டில் நடந்த தாக்குதல் விவகாரத்தினையும் அவையில் எழுப்பினார். தொடர்ந்து அவர்,  ``தேச விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தனது மெளனத்தினைக் கலைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், ``சட்டம் - ஒழுங்குப் பிரச்னை என்பது மாநில அரசின் விவகாரம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!